ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்.3) பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை குறித்தும் விளக்குகிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறப்பு பணிக்குழு காவலர் தேவ் பிரகாஷ். "பிஜாப்பூரின் காடுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட நக்சல்கள் மூன்று பக்கங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களை சுற்றி வளைத்தனர்.
இதற்கு மத்தியில், காடுகளுக்குள் முன்னேறிச் சென்ற பாதுகாப்புப் படையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு நக்சல்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் நக்சல்கள் கொல்லப்பட்டனர். திரும்பிய பக்கமெல்லாம் தோட்டா மழை பொழிந்துகொண்டிருந்தது.
இருப்பினும், பாதுகாப்புப் படையினர் காயமடைந்த வீரர்களையும், உயிரிழந்த வீரர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று, நக்சல்களையும் சமாளித்து வந்தனர். கோப்ரா படைப்பிரிவினர் குறைவான எடைகொண்ட துப்பாக்கிகளை பயன்படுத்தியும், குறைந்த வெடிக்கும் திறன்கொண்ட குண்டுகளைப் பயன்படுத்தியும் தாக்குதலைத் தொடர்ந்தனர். இந்தத் தாக்குதல் மாலை வரை நீடித்தது" என கண்கள் விரிய அந்தச் சம்பவத்தை விவரித்தார்.