பெகுசராய்: பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் கரோனா தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதாக, 2 வயது சிறுவன் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அந்த சிறுவன் 2 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஆஜராகி இருப்பதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் பரவாமல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக, தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று அறிவித்து அங்குள்ள மக்கள் வெளியேறாமல் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வகையில், பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், அந்த கிராமத்தில் சில பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்த வேலியை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி சிலர் உடைத்து கட்டுப்பாடுகளை மீறி உள்ளனர். அப்போது 2 வயது குழந்தை அந்த வேலியை தாண்டி வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் பெகுசராய் போலீசார், வேலியை உடைத்து கட்டுப்பாடுகளை மீறியதாக குழந்தை உட்பட எட்டு பேர் மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: தேவேந்திர பட்னாவிஸ் மனைவிக்கு ரூ.1 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கு: ஆடை வடிவமைப்பாளர் கைது
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், போலீசார் குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லவில்லை. இருப்பினும், குழந்தையின் தாயார் தனது மகன் மீது போடப்பட்ட வழக்கை, ரத்து செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அதற்கு, போலீசார் 2 ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் தாயார் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தார். அண்மையில் தனது குழந்தையின் மீது போடப்பட்ட வழக்கில் ஜாமீன் கொடுக்குமாறு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 16) நடந்தது. அப்போது நீதிபதி 4 வயது குழந்தையையும், அவரது தாயாரையும் கண்டு வியந்து போனார். அதோடு, 4 வயது குழந்தைக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. சொல்லப்போனால், 2 வயது குழந்தை மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பே கிடையாது. இந்த விவகாரத்தில் பெகுசராய் போலீசார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, இந்த குழந்தையின் பெயரை கிரிமினல் வழக்கில் இருந்து நீக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். குழந்தையும் அவரது தாயாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்தினார். இந்த சம்பவம் பீகாரில் பேசு பொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: கறிக்கடைக்காரர்கள் முகத்தில் சிறுநீர் கழித்த போலீஸ்காரர்கள்