டெல்லி : 81 கோடி இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி, பாஸ்போர்ட் உள்ளிட்ட தரவுகள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது
இந்த தரவுகள் பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இதைச் செய்தது யார் என்று கண்டுப்பிடிக்கும் பணியில் சிபிஐ மற்றும் பல்வேறு மத்திய ஏஜென்சிக்கள் இறங்கின. இந்நிலையில், 81 கோடி இந்தியர்களின் தரவுகள் திருடப்பட்டது உண்மை என்பது விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக, 3 மாநிலங்களை சேர்ந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் இந்தியர்களின் தரவுகள் திருடப்பட்டது கள்ளச் சந்தையான டார்க் வெப்பில் விற்கப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில், கடந்த மாதம் டெல்லி போலீசார், தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், டெல்லி போலிசார் நடத்திய விசாரணையில் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பி.டெக் பட்டதாரி, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த பாதியில் பள்ளிப் படிப்பை துறந்த இரண்டு பேர் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த ஒருவர் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமான நால்வரும், விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என திட்டமிட்டதாகவும், மூன்று ஆண்டுகளாக நடத்திய திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தரவுகளை திருடியதாகவும் தெரிவித்து உள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் புலனாய்வு விசாரணை முகமையான எப்.பி.ஐ மற்றும் பாகிஸ்தானின் தேசிய கணிணி மய அடையாள எண் உள்ளிட்டவற்றில் இருந்தும் தரவுகளை திருடியது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகேத் கோக்லே, பிரதமர் மோடி தலையிலான அரசு ஆதார் தரவுகள் திருடப்பட்ட விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட்டதாகவும், நாடாளுமன்றத்தில் ஆதார் தரவுகள் திருட்டு குறித்து எனது கேள்விக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை என தெரிவித்து விட்டு, தற்போது தரவுகளை கசியவிட்ட விவகாரத்தில் 4 பேரை கைது செய்து உள்ளதாக தெரிவித்தார்.
ஐசிஎம்ஆரின் சர்வரில் இருந்த பொது மக்களின் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட தரவுகள் டார்க் வெப்பில் கசிந்தது எப்படி, நாடாளுமன்றத்தில் அது சார்ந்த அமைச்சகம் ஏன் பொய் கூறியது என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் விடுதி செப்டிக் டேங்க் கழுவிய விவகாரம் - அரசின் நடவடிக்கை என்ன?