பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள பின்னி மில் அருகே ஏழு மாடிகள் கொண்ட காவலர்கள் குடியிருப்பு ஒன்று உள்ளது.
கர்நாடக மாநில காவல்துறை குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தால், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 2018ஆம் ஆண்டு இந்த குடியிருப்பு திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 64 காவலர் குடும்பங்கள் இங்கு குடியிருக்கின்றன.
கனமழை காரணமாக, இந்த குடியிருப்பில் உள்ள பி - பிளாக்கின் கீழ்தளத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் இரண்டு அடிக்கு சாய்ந்துள்ளது.
இதனால், பி - பிளாக்கில் உள்ள 32 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அன்னபூர்ணேஷ்வரி நகரில் உள்ள மற்றொரு காவலர்கள் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன்...
நேற்று முன்தினம் (அக். 15) விரிசல் விடும் சத்தம் கேட்டு, அங்கு குடியிருப்பவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது கட்டடம் ஒரு பக்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு சிறு விரிசல் ஏற்பட்டதாகவும் குடியிருந்தவர்கள் கூறுகின்றனர்.
இதன்பின்னர், மாநகர காவல் ஆணையர் கமல் பந்த், மேற்கு மண்டல டிசிபி சஞ்சீவ் பட்டில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
கவலைக்கிடமான கட்டடங்கள்
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், இந்த கட்டடத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கமல் பந்த் தெரிவித்தார்.
முன்னதாக, நகரில் 409 கட்டடங்கள் ஆங்காங்கே இடிந்தும், பெயர்ந்தும் விழுந்துள்ளன. 404 கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூருவில் ஆபத்தான நிலையில் 404 கட்டடங்கள்!