உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசி போடும் திட்டத்தை வரும் 16 ஆம் தேதியன்று மத்திய அரசு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில / யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, காணொளி வாயிலாக இன்று (ஜன.11) கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, பாதிப்பை வெகுவாகக் குறைத்திருக்கிறோம். உலகின் வேறெந்த பகுதிகளிலும் இல்லாத வகையில், நமது அரசு முழு உணர்திறனுடன் முடிவெடுத்து துரிதமாக செயலாற்றியது.
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சரியான உரையாடல் பெருமளவில் உதவியது. உலக நாடுகளுக்கு நமது நாட்டின் கூட்டாட்சி முறையை வெளிப்படுத்த இந்த நெருக்கடியான சூழல் நமக்கு வாய்ப்பளித்துள்ளது. சர்வதேச அளவில் முன்மாதிரியாக நாம் பணியாற்றியுள்ளோம். நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக நின்றோம், அதன் மூலமக மக்களின் நலனைப் பாதுகாத்தோம் என்பதை உணர்ந்து திருப்தி அடைகிறேன்.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான இரண்டு கரோனா தடுப்பூசிகள், விரைவில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது. அதற்காக தான் கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதனை பொதுமக்களுக்கு எவ்வாறு அளிப்பது என நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவிட்-19 தடுப்பூசி நடைமுறைக்கும் வரும் அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு போடப்படும். அதனை இலக்காக வைத்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
![30 crore people to be vaccinated against COVID-19 in next few months: PM Modi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/pm-moid-gs11_1101newsroom_1610332261_194.jpg)
முதல் கட்ட தடுப்பூசி வழங்கலில் அரசு - தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அலுவலர்கள், ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், துணைப் பாதுகாப்பு படையினர், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இரண்டாவது கட்டத்தில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு நோயுற்ற நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதனை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம். மொத்தம் 30 கோடி மக்களுக்கு முதல்கட்ட சோதனையில் தடுப்பூசி போடப்படும். ஜனவரியில் தொடங்கும் இந்த தடுப்பூசி வழங்கல் ஜூலை இறுதி வரை தொடரும்.
தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களின் உடல் வெப்பமும், ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் ஆதார் அட்டையுடன், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என உள்ளிட்ட அடையாள அட்டைகளில் இரண்டு ஆதாரங்கள் வாங்கப்படும். பின்னர், கரோனா தடுப்பூசி போடும் பயனாளிகளின் விபரம் கணினி மூலம் கோவிட் 19 செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
தடுப்பூசி ஒத்திகை பயனாளிகள், அரை மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவும் ஏற்படவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : கூட்டு செயல் திட்டம் தயாரிக்க சோனியா காந்தி அறிவுறுத்தல்!