புதுச்சேரி: லூயிஸ் பிரகாசம் வீதியில் வசிக்கும் பாபுலால் என்பவர் தனது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஆன்ஸ், புகையிலை போன்ற போதைப் பொருள்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் பெரிய கடை ஆய்வாளர் கண்ணன், எஸ்.டி.எப் ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் அந்நபரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது பாபுலாலின் வீட்டில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் பாபுலால், சுரேஷ் பிஸ்நாய், சுமான் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுரேஷ் பிஸ்நாய் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாகவும், அவற்றை விலைக்கு வாங்குவதற்காக சுமான் அங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த எட்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மொத்த பொருள்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.