கடந்த 2019ஆம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 3.77 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, கிராமப்புறங்களில் உள்ள ஏழு கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருவதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போதும், தினமும் ஒரு லட்சம் பேருக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, கிராமப்புறங்களில் உள்ள 18.93 கோடி வீடுகளில் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் வசதி இருந்தது.
2024ஆம் ஆண்டுக்குள், 15.70 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் உள்ள 19 கோடி குடும்பங்கள் பயனடையும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.