பஹதுர்கார் (ஹரியானா): ஹரியானா மாநிலம், பஹதுர்காரில் உள்ள கேஎம்பி விரைவு சாலையில் அதிவேகமாக வந்த லாரி அங்கு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இன்று (மே 19) காலை மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் கூறுகையில், "தொழிலாளர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு சாலையோரத்தில் தூங்கி உள்ளனர். சாலையின் ஒரு புறத்தில் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தொழிலாளர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அங்கு அதிவேகமாக வந்த லாரி ஒன்று தடுப்புகளை உடைத்துக்கொண்டு தொழிலாளர்கள் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இங்கு சாலை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
மேலும், விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் உடற்கூராய்வுக்காக பஹதுர்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாசின் மாலிக் குற்றவாளி.. மே25 தண்டனை விவரங்கள் அறிவிப்பு!