கவர்தா (சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலத்தின் கவர்தா மாவட்டத்தில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில்தான் இந்தக் குவா குவா சத்தம் கேட்டுள்ளது.
இங்கு லேசான கோவிட் அறிகுறிகளுடன் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அழகிய குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகள் மூன்றும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. மேலும், கோவிட் பாதிப்புகளும் இல்லை.
இது கோவிட் சிகிச்சை மையத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தாயும்- சேய்களும் நலமுடன் உள்ளனர். எனினும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக குழந்தைகள் தாயிடம் கொடுக்கப்படவில்லை.
இது குறித்து கோவிட் சிகிச்சை மையத்தின் மருத்துவர் கூறுகையில், “எங்களுக்கு சிறிது அச்ச உணர்வு இருந்தது. தாயை போன்று குழந்தைகளுக்கும் கோவிட் பெருந்தொற்று பரவி விடுமோ என்று நினைத்தோம். இதனால் மிகவும் கவனமாக சிகிச்சை அளித்தோம். தற்போது தாயும்- குழந்தைகளும் நலமுடன் உள்ளனர், எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.