2008ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையிலான யூ.டி.ஏ கூட்டணி ஆட்சியில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று, சுப்ரமணியம் சுவாமி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்க முகாந்திரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் ஆ. ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும்போது ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றைகள் ஜனநாயக விரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை என தெரிவித்து வழங்கப்பட்ட 122 அனுமதிகளையும் ரத்து செய்தது. 2ஜி அலைக்கற்றை முறையீட்டினை டைம் நாளிதழ் உலகின் முக்கிய 10 அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஒன்றாகக் கூறியது.
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்பட்டன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் புலனாய்வு செய்யும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாள்கள் இயங்காது அவை முடக்கம் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இம்முறைகேடுகள் குறித்த மத்தியப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளை நேரடியாக கண்காணிக்க தீர்மானித்தது. நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவும் முறைகேடுகளை ஆராய்ந்தது.
இதனிடையே, இவ்வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2017 டிசம்பர் 21அன்று, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து 20 மார்ச் 2018அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும், சிபிஐயும் மேல்முறையீடு செய்தன. அதன் விசாரணை 5 அக்டோபர் 2020அன்று தொடங்கியது.
இந்நிலையில், நேற்று (ஜன.14) இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி யோகேஷ் கண்ணா தலைமையிலான அமர்வின் முன்பாக காணொலி வாயிலாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் துஷாா் மேத்தாவும், விடுவிக்கப்பட்டவர்களின் சார்பாக வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் ஆஜராகினர்.
வழக்கு விசாரணை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே, காணொலி இணைப்பில் சிக்கல் எழுந்தது. இணைப்புப் பிரச்னைகள் காரணமாக விசாரணை நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை இன்று (ஜன.15) நடத்துவதாக அறிவித்தது.
இதையும் படிங்க : காஷ்மீரில் 270 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக தகவல்!