நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று, 17ஆவது மக்களவையின் நான்காவது கூட்டம் நடைபெறுகிறது.
அதில், கரோனா காலத்தில் உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்பட 27 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. கடந்த கூட்டத் தொடரில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுமதி வழங்கிய 27 மசோதாக்களை மக்களவை பொதுச்செயலாளர் உத்பால் குமார் சிங் இன்று தாக்கல் செய்கிறார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் 21ஆவது அறிக்கை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஆகியவற்றை மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக எம்பி சத்யா பால் சிங் ஆகியோர் இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
லைட் காம்பாட் விமானத்தின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி தொடர்பான நிலைக்குழுவின் 114ஆவது அறிக்கையையும் நிலக்கரி மற்றும் எஃகுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையையும் அவர்கள் இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.