பாட்னா : பீகாரில் இடி மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் மோசமான வானிலை மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இடி மின்னல் தாக்கி இதுவரை 9 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாக மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ரோடாஸ் மாவட்டம் சாசாரம் நகரில் மின்னல் தாக்கி 5 பேரும், அர்வல் மாவட்டத்தில் நான்கு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாநிலத்தில் இயற்கை பேரிடர் காரணமாக பாட்னா, ரோடாஸ், அர்வால், முசாபர்பூர், நாலந்தா, அவுரங்கபாத், வைசாலி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்படைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரோஹ்தாஸ் மற்றும் அர்வால் ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்ததை தவிர, சாப்ராவில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் அவுரங்காபாத் மற்றும் கிழக்கு சம்பரானில் 2 பேரும், கைமூர், சீதாமர்ஹி, முசாபர்பூர், பாட்னா, வைஷாலி நாளந்தா, அராரியா, கிஷன்கஞ்ச், பாங்கா மற்றும் சிவான் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிதிஷ் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் பாட்னா, சஹர்சா, ககாரியா, மாதேபுரா, மதுபானி, மேற்கு சம்பாரண், பாகல்பூர், பூர்னியா, கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவிர மழைப் பொழிவு இருப்பதாக கூறி வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 5ஆம் தேதி, ரோடாஸ், பக்சர், ஜன்னபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பேரிடர் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Momos: மோமோஸ் சாப்பிடுவதில் பந்தயம்... நொடியில் பறிபோன இளைஞரின் உயிர்!