பெங்களூர்: பாங்காக்கில் இருந்து வந்த பயணிகள் விமானம் எண் FD-137 பெங்களூர் தேவனஹள்ளி கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு நேற்றய முந்தினம் ( ஆகஸ்ட் 21) வந்துள்ளது. பெங்களூர் சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காகில் இருந்த வந்த பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு நபர், கையில் இரண்டு பெட்டிகளுடன் (Trolley) வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் கொண்டு வந்திருந்த பெட்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இரு பெட்டிகளில் சோதனையிட்ட போது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு பெட்டிகளிலும் அரிய வகை உயிரினங்களை கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், கடத்தி வரப்பட்ட உயிரினங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் அரிய வகை உயிரினங்களான உடும்பு, மலைப்பாம்பு, கங்காரு, முதலைகள் உள்ளிட்ட 234 உயிரினங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
கடத்தி கொண்டுவரப்பட்ட உயிரினங்கள் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாடு (CITE) பட்டியலில் இருக்கின்றன என தகவல் வெளியாகியுள்ளது. சுங்கச் சட்டம் 1962 பிரிவு 104ன் கீழ் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மனைவிக்கு You tube பார்த்து பிரசவம் செய்த இயற்கை ஆர்வலர்.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி..
மேலும், சுங்கச் சட்டம் 1962 பிரிவு 110ன் கீழ் மீட்கப்பட்ட வன விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைபோன்று இன்று (ஆகஸ்ட் 23) தாய்லாந்து நாட்டிலிருந்து 40க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களை விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தங்கம் கடத்தல்: சமீபத்தில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நட் போல்ட் முறையில் தங்கம் கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் எண் 568-ல் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கம் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
துபாயில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர் தனது பையில் தங்கத்திலான நட்டு போல்ட்டை கடத்தி கொண்டுவந்துள்ளார். பையை சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து அவர் கடத்தி கொண்டுவந்த 267 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில தினங்களாக விமான நிலையங்களில் தங்கம், உயிரினங்கள் கடத்தி கொண்டுவரப்படும் நிலையில் விமான நிலையங்களில் போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பலத்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள்! சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?