டெல்லி: ஹைதராபாத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் திஷா(மாற்றம் செய்யப்பட்ட பெயர்) நான்கு பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இளம்பெண்ணின் இருசக்கர வாகனத்தை திட்டமிட்டு பஞ்சர் செய்து, அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் எனக் கோரி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச்சம்பவத்தில், முகமது ஆரிஃப், சென்னாகேசவலு, ஜோலு சிவா, நவீன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் மீட்கப்பட்ட அதே நெடுஞ்சாலையில், கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹைதராபாத் போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். அவர்கள் போலீசாரை துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பித்து செல்ல முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. இந்த என்கவுன்ட்டர் போலியானது என்ற சந்தேகம் இருப்பதாகவும், இந்த என்கவுன்ட்டரை நடத்திய போலீசாருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது. இந்த குழு பல மாதங்களாக கால அவகாசத்தை நீட்டித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், விசாரணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், ’ஹைதராபாத் போலீசார் நடத்திய இந்த என்கவுன்ட்டர் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நால்வரில் மூன்று பேர் சிறார்கள். அதனை மறைத்து அவர்களின் வயது 20 எனப் பதிவு செய்து, போலீசார் இந்த என்கவுன்ட்டரை நடத்தியுள்ளனர். அவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே போலீசார் இந்த என்கவுன்ட்டரை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இந்த என்கவுன்ட்டரை நடத்திய 10 போலீசார் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றும் விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனைப்பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு என்பதால், தாங்கள் விசாரிக்க ஒன்றுமில்லை என்றும், அறிக்கையில் யார் குற்றவாளி என்பது குறித்து விசாரணைக்குழு பதிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். ஹைதராபாத் காவல்துறையின் இந்த என்கவுன்ட்டரை நாடே கொண்டாடிய நிலையில், இந்த விசாரணை அறிக்கையால் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளை கட்டுபடுத்தாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு