கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் ஸ்வர்ணாஞ்சலி என்ற நகைக்டையை நடத்தி வந்துள்ளார். கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இவரது தொழில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடையை மூடிவிட்டு, கடையில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்களை தனது புதிய வீட்டிற்கு கொண்டு வந்து லாக்கரில் வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அவரது மகள் திருமணத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து மாவட்டமான ஹாசனுக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ஒன்று, அன்று இரவே வீட்டின் பின்புறமாக கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து, மூன்று கிலோ தங்கத்தையும், 30 கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 2.50 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் கைரேகைகளை சேகரித்து அப்பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவம் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்!