பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் தியாமப்பா ஹரிஜன் (58) என்பவரின் வயிற்றிலிருந்து 1.2 கிலோ எடையுள்ள 187 நாணயங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. ரெய்ச்சூர் மாவட்டம், சந்தே கெளூரு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாமப்பா ஹரிஜன். இவருக்கு செரிமானம் தொடர்பாக சிக்கல் இருந்துவந்துள்ளது. இதனிடையே குடிப்பழக்கதிற்கும் அடிமையாகியுள்ளார். நாள்தோறும் வயிறு வலிப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துவந்துள்ளார்.
அண்மையில் அவர் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கும்போது குடும்பத்தார் பார்த்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது உள்ளே 100 -க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் நாணயங்களை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்காக அவர் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று (நவம்பர் 27) அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 56 ஐந்து ரூபாய் நாணயங்கள், 51 இரண்டு ரூபாய் நாணயங்கள் மற்றும் 80 ஒரு ரூபாய் நாணயங்கள் அகற்றப்பட்டன. இந்த நாணயங்களின் மொத்த எடை சுமார் 1.2 கிலோவாகும். இப்போது தியாமப்பா ஹரிஜன் நலமாக உள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து... 13 பேர் காயம்...