இடுக்கி (கேரளா): கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தேயிலை தோட்டத்தில், நேற்று (மே 29) சிறுமி அவரது நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
காவல் துறையினர் கூறுகையில், "மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் 15 வயது மகள் நேற்று அவரது நண்பருடன் தேயிலைத் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நான்கு நபர்கள் சிறுமியை அடித்து, துன்புறுத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த நண்பர் உதவிக்காக கூச்சலிட்டுள்ளார். பொதுமக்கள் அங்கு வருவதற்குள் நான்கு பேரும் தப்பி ஓடி உள்ளனர். தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகிறோம்" என்றார்.
இதுகுறித்து இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருப்பசாமி கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர், சந்தேகிக்கப்படும் நபர்கள் எனப் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 38 பேர் சென்ற டாடா ஏஸ் வாகனம் லாரி மீது மோதல் - 7 பேர் பலி