மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஜின்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த மே.14 ஆம் தேதி சாகிப் சித்திக் என்ற 13 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். மூன்றாவது மாடியில் இருந்த லிஃப்டில் உள்ளேயும் வெளியேயும் சென்று சிறுவன் விளையாடியதாக கூறப்படுகிறது.
அப்போது, லிஃப்டின் கதவு மூடும்போது வெளியே ஓடிவந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக கதவுகளுக்கிடையே மாட்டிக் கொண்டான். சிறுவனின் தலைப்பகுதி கதவில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
சிறுவன் வெளியே வர முயற்சித்தும் முடியவில்லை. அப்போது, சிறுவனின் கழுத்து லிஃப்ட் கதவில் சிக்கி நசுங்கியுள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபதாக உயிரிழந்தான். சிறுவன் இறந்து கிடந்த நிலையைக் கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுவன் சாகிப்பின் பெற்றோர் சுற்றுலா மற்றும் பயண சேவை தொடர்பான தொழில் செய்து வருகின்றனர். பெற்றோர்கள் வேலை காரணமாக ஹைதராபாத் சென்றதால், சிறுவன் ஜின்சி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளான். அப்போதுதான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் லிஃப்ட்டில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இதுபோல லிஃப்டில் விளையாட குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
இதையும் படிங்க: நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!