காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 128 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருக்கும் மாவட்டங்களில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் இந்த நில நடுக்கத்தில் படுகாயம் அடைந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
நேற்று (நவ. 3) நள்ளிரவு வடமேற்கு நேபாளத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம், பல்வேறு இடங்களில் கடுமையான சேத விளைவுகளை ஏற்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ருக்கும் உள்ளிட்ட பல்வேறு மலைப் பிரதேச மாவட்டங்களில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ருக்கும் மாவட்டத்தில் மட்டும் 35 பேர் வரை உயிரிழந்ததாகவும் ஜாஜர்கோட் மாவட்டத்தில் 34 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தனித் தீவுகளாய் நிவாரணத்திற்காக தவித்து வருகின்றனர்.
இந்த நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி : சென்னை, சிவகங்கை, நெல்லை, குமரி, தேனி என தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!