புதுடெல்லி: நடப்பாண்டில் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இம்மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுவதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளனர்.
சக்தி வாய்ந்த மற்றும் பொருளாதார ஆளுமைகளை உறுப்பு நாடுகளாக கொண்டிருக்கும் இந்த ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். ஆகையால் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நகரம் முழுவது கோலாகலமாக நடைபெற்று, பாதுகாப்பு பணிகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டிற்கு விரைந்து, மாநாடானது சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் கவனிப்பு ஏற்பாடுகள் பார்த்து, பார்த்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு விருந்தானது குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் (Rashtrapati Bhavan) பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விருந்து வெறும் வாய்க்கு மட்டும் அல்ல, செவிக்கும் தான் என்பதை உணர்த்தும் வகையில், விருந்தினர்களின் இரவு உணவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தக்ஷி (Dakshi) மிருதங்கம் வாசித்து உலகப் பிரதிநிதிகளை வரவேற்க உள்ளார். மேலும் இந்த இசை நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 78 இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து சிறுவன் தக்ஷி கூறுகையில், "ஜி20 உச்சி மாநட்டில் பங்கேற்பது என்பது எனக்கு கிடைத்த பெருமை. இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, சங்கீத நாடக அகாடமியின் தலைவர், பள்ளியின் செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு நன்றி. இந்த இரவு விருந்தில் நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சியின் நோக்கமே, இனிப்பு உணவுடன் இனிமையான இசை என்பதே" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தனக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்காக, கடந்த ஒன்பது நாட்களாக தக்ஷி உட்பட அனைத்து இசைக் கலைஞர்களும் தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஒத்திகை பார்த்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: LIVE: G20 Summit : ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்! உலக தலைவர்கள் பங்கேற்பு!