டெல்லி: சிபிஎஸ்இ (CBSE) மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நேரடி தேர்வை ரத்து செய்து மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. முன்னதாக கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், “28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் தேர்வு நடத்தப்பட்டுவிட்டது.
18 மாநிலங்கள் தேர்வை ரத்து செய்துவிட்டன. அஸ்ஸாம், பஞ்சாப், திரிபுரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை” என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர்.
சிபிஎஸ்இ தேர்வை எதிர்த்து 1152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கூட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் குறைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மதிப்பெண் வழக்குவது குறித்தும் சில வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முன்னதாக கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர் தரப்பில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.