ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் உள்ள பிகானேர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று லாரி மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மாவட்ட காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள், உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட தகவலில், மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் ஜீப்பில் ராம்தேவ்ரா கோயில் நோக்கி இன்று அதிகாலை புறப்பட்டனர். இதையடுத்து ஜீப் நாகூர், பிகானேர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், "ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் நடந்த கொடூரமான சாலை விபத்து, மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பங்களுக்கும் தனது இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடை வேண்டுகிறார்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரு கோர விபத்து: திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் உள்பட 7 பேர் மரணம்