மைசூர் : கர்நாடகாவில் இனோவா காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மைசூர் மாவட்டம் கோலேகல் - டி நரசிபுரா தேசிய நெடுஞ்சாலையில், விளையாட்டு சங்கத்தின் இனோவா கார் சென்று உள்ளது. அப்போது எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது இனோவா கார் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் தனியார் பேருந்தின் அடியில் சிக்கி கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு குழந்தைகள் உள்பட பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 4 வயது சிறுவன் உள்பட இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பெல்லாரி ஊரக பகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் விபத்து ஏற்பட்ட நெடுஞ்சாலையில் வனம் போல் மரங்கள் வளர்ந்து உள்ளதாகவும், தூரத்தில் வரும் வாகனங்களை கணிக்க முடியாத அளவுக்கு சாலையை மரங்கள் மறைத்து கிடப்பதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள், சாலையை மறைக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ள மரங்களால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்துக்கு நெடுஞ்சாலைத் துறையே முக்கிய காரணம் என்றும் கூறினர். மேலும், விரைந்து சாலையில் வளர்ந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
விபத்து குறித்து அறிந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உயரிய வகையில் இலவச சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் சித்தராமையை உத்தரவிட்டு உள்ளார்.
அதேநேரம், நெடுஞ்சாலையில் இடையூறாக இருந்த மரங்களால் இந்த விபத்து நடந்ததாகவும், இதுபோன்ற விபத்துகள் தொடர் கதையாகி வருவதால் இந்த விபத்துக்கு பொறுப்பான நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க : "குடியரசு இறந்துவிட்டது.. கடவுளே அரசரை காப்பாற்றுவார்.." திரிணாமுல் எம்.பி. கூறியது யாரை?