ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இது புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல், தட்டவெப்பநிலை மற்றும நீர்நிலைகள் உள்ளதால் புலிகளின் புகலிடமாக உள்ளது. 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியானது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, 22 புலிகளாக இருந்த நிலையில், தற்போது 120க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக அண்மையில் புலிகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில், தலமலை வனத்தில் இரு புலிகள் ஓய்வு எடுக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. திம்பம் மலைப்பாதையில் இருந்து காரில் பயணித்த 4 பேர் தலமலை சென்று கொண்டிருந்தனர். தலமலை அருகே ராமர் அணை என்ற இடத்தில் திரும்பும்போது மரநிழலில் புலிகள் ஓய்வு எடுப்பதை பார்த்து தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மேலும், வனத்தில் புலிகளை படம் பிடிப்பது ஆபத்தானது எனவும், அதனை மீறி புகைப்படம் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.