கோயம்புத்தூர்: ரயிலில் மோதி யானைகள் மரணம் என்ற செய்தியை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த அசம்பாவித சம்பவங்களை நாங்கள் குறைத்து விட்டோம் என்கின்றனர் தமிழ்நாடு வனத்துறையினர். கடந்த அக்டோபர் 2023ல் ஏஐ கேமரா மூலம் யானைகளை பாதுகாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் ஓராண்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பாதுகாக்கப்பட்டதாக கூறுகின்றனர் வனத்துறை பணியாளர்கள்.
யானைகள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு கேமரா முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கோவை வழியாக நாள்தோறும் சுமார் 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் பயணிக்கின்றன. இதில் டிராக் பி வழித்தடத்தில் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள 2.8 கி.மீ. தூரம் கொண்ட ரயில்பாதை தான் யானைகளும் ரயில்களும் சந்திக்கும் ஹாட்ஸ்பாட். இந்த பதற்றம் மிகுந்த ஆபத்தான பகுதியை நோக்கி பயணித்த அனுபவத்தை அவருடைய பார்வையில் எழுதுகிறார் ஈடிவி பாரத்தின் செய்தியாளர் ஸ்ரீனிவாசன்.
நவம்பர் 20ம் தேதி கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு சென்றோம். வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள 10 க்கு 20 அளவு உள்ள அந்த கட்டுப்பாட்டறை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த அலாரம் ஒலிக்க அங்கிருந்த கண்காணிப்பாளர்கள் வாக்கிடாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். பரபரப்பான பணிக்கு நடுவே நம்மிடம் பேசிய அஜித் என்ற பணியாளர், கண்காணிப்பு ஏ.ஐ. கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து விளக்கினார். எங்கள் கையிலிருக்கும் ஜாய்ஸ்டிக் மூலம் 360 டிகிரிக்கு கேமராக்களை திருப்பி யானைகள் மற்றும் இதர வன விலங்குகள் ரயில்வே டிராக்கை நெருங்குவதை கண்காணிக்க முடியும் என்கிறார் அஜித்.
இந்த கட்டுப்பாட்டறையில் 4 பேர் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான அஜித், பொறியியல் படித்துள்ள தமக்கு இந்த பணி மனநிறைவைத் தருவதாகக் கூறினார். பழங்குடியினரைப் பொறுத்தவரையிலும் யானைகளை நாங்கள் எங்கள் வாழ்வின் அங்கமாகப் பார்க்கிறோம். அவற்றை பாதுகாக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அஜித்.
பேசிக் கொண்டிருந்த போதே மீண்டும் அலாரம் அடித்தது. சின்னாம்பதி ரயில்வே கேட் அருகே ஒற்றைக் கொம்புடைய யானை ரயில்வே கேட் அருகே நிற்பதாக வாக்கிடாக்கியில் தகவல் அளித்தார் அஜித். ஆர்வம் அதிகரிக்கவே, அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் உதவியோடு, யானை நிற்கும் அந்த சின்னாம்பதி நோக்கி பயணித்தோம்.
ரயில்வே கேட் அருகில் மதுக்கரை வனக்காப்பாளர் சதீஷ் வர்மா நம்மை வரவேற்றார். இருள் சூழ்ந்த அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு ரயில்வே டிராக்கில் நடக்கத் தொடங்கினோம். பாம்புகளும், தேள்களும் அதிகம் உலவும் பகுதி என்பதால் காலை நோக்கி டார்ச் அடித்தவாரே நடக்குமாறு அறிவுறுத்தினார் வனக்காப்பாளர் . ரயில்வே தண்டவாளம் அருகே ஒற்றை கொம்பு யானை கோரைப்புற்களை அசைபோட்டபடி நின்றது. இதனைப் பார்த்ததும் என் மனதில் இதே பகுதியில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இரவு ரயில் மோதியதில் மூன்று யானைகள் உடல் சிதறி பலியான கோர காட்சிகள் கண் முன் வந்து சென்றன.
நான் இந்த பதற்றத்தில் உறைந்து நிற்க, வனக்காப்பாளர் சதீஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என்னை தாண்டி யானையை நோக்கி முன்னேறினர். அந்த ஒற்றைக் கொம்பு யானையை டார்ச் லைட்டை அடித்தும், குரல் எழுப்பியும் விரட்டினர் வனத்துறையினர். யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து விட்டதை கட்டுப்பாட்டறையிலிருந்து வாக்கிடாக்கி மூலம் உறுதி செய்தார் அஜித். ஆனால் 50 மீட்டர் தொலைவில் உள்ள புதரில் உங்களை நோக்கி தான் யானை உள்ளது எனவும் எச்சரித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து விலகிய யானை ரயில்வே டிராக்கின் கீழே இருக்கும் சுரங்கப்பாதை வழியாக கடந்து சென்றது.
தொடர்ந்து பேசிய வனக்காப்பாளர் மழைக்காலங்களிலெல்லாம் யானைகளை விரட்டுவது பெரும் சிரமாக இருக்கும் எனக் கூறினார். கடந்தவாரத்தில் யானைகளை விரட்டச் சென்ற போது, 2 யானைகள் கடந்து போய்விட்ட நிலையில் கடைசியாக வந்த பெரிய யானை ஒன்று தங்களை விரட்டியதையும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் 2.8 கி.மீ. வனப்பகுதி முழுவதும் ஏஐ கேமராக்கள் உள்ளன. இவை யானை எந்த பகுதியில் இருக்கிறது? எந்த திசையில் பயணிக்க எத்தனிக்கிறது? போன்ற தகவல்களை பகல், இரவு, மழை என அனைத்து நேரத்திலும் துல்லியமாக கொடுத்துவிடுகின்றன. இல்லை என்றால் டிராக் முழுவதும் நடந்தே அலைந்து திரிந்து தான் யானைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்கின்றனர் வனத்துறையினர். கடந்த 20 ஆண்டுகளில் 35 யானைகள் மரணமடைந்த நிலையில் ஏ.ஐ. கேமரா பொறுத்தப்பட்டப் பின்னர் யானைகளின் மரணம் இந்த பகுதியில் நிகழவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
வனத்துறைக்கு தகவல் தரும் அதே நேரத்தில் ரயில்வே துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, லோகோ பைலட் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்கவோ அல்லது நிறுத்தவோ அறிவுறுத்தப்படுகிறார். யானைகள் மட்டுமல்ல காட்டு மாடுகளும் (Bison) ஏஐ கேமராக்களால் காப்பாற்றப்படுவதாக வனத்துறைனிரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அண்மையில் கருஞ்சிறுத்தை உட்பட நான்கு சிறுத்தைகள் ரயில் வரும் நேரத்தில் ரயில் பாதையில் நின்றுக் கொண்டிருந்தன. அப்போது அவற்றையும் சரிவர கண்காணித்து ரயில் பாதையிலிருந்து விரட்டப்பட்டன என்பதை வனத்துறை பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகளை பாதுகாக்க ஏஐ கேமராக்கள் கோவை வனப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த முயற்சி நல்ல பலனை கொடுத்திருக்கிறது. மோஷன் டிடெக்டர் மற்றும் இரவு நேரத்தில் காட்சிகளைக் கொடுக்கும் இன்ப்ரா ரெட் (IR) கேமராக்கள் எனும் எளிமையான தொழில்நுட்பங்களே இதன் அடிப்படையாக உள்ளன. யானைகள் போன்ற விலங்குகளின் அசைவை செயற்கைத் தொழில்நுட்பம் கண்டறிந்து எச்சரிக்கை கொடுக்கிறது. இதன் பின்னர் அத்தனை உழைப்பும் வனத்துறையினருடையதுதான். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் மூலம் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுவதன் பின்னணியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மட்டுமின்றி, காலநேரம் பார்க்காது வனத்தில் இறங்கி பணியில் ஈடுபடும் வனத்துறை பணியாளர்களின் அர்ப்பணிப்பும் இருக்கிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்