திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடச் சென்ற சிறுவன் உள்பட 3 பேர் மின் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், சின்னமூக்கனூரைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (39). இவரது மகன் லோகேஷ் (9), பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த கரிபிரான் (70). இவர்கள் மூவரும் நேற்று நள்ளிரவு வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக குரிசிலாபட்டு அடுத்த பெருமாபட்டு காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் எதிர்பாராத விதமாக மூவரும் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் அங்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.