சென்னை: சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகமாக வந்தவண்ணம் உள்ளன. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலமாகவும், இ -மெயில் மூலமாகவும் பெரும்பாலும் இந்த மிரட்டல் வருகின்றன.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும் மிரட்டல் விடுக்கும் நபர்களில் பலர் சிக்காமல் இருப்பது போலீசாருக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்படவுள்ளதாக, இ-மெயில் மூலமாக சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவுக்கு இன்று மிரட்டல் வந்தது.
இதையடுத்து சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மோப்பநாய் உதவியோடு மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதன்பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த புரளி தொடர்பாக பரங்கிமலை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.