கன்னியாகுமரி: காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியிலிருந்து காலாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு, நேற்று (செப்.27) 90க்கும் மேற்பட்ட மாணவர்களை 2 பேருந்துகளில் அழைத்துக் கொண்டு தேனி சுற்றுலாத் தலங்களுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில், ஆண்டிபட்டி அடுத்த குன்னூர் டோல்கேட் அருகே வந்தபோது, 46 மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்துள்ளது.
அதிகாலை என்பதால் பேருந்து கவிழ்ந்த போது, தூங்கிக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் கதறி கூச்சலிட்டுள்ளனர். அந்த சத்தம் கேட்ட மற்றொரு பேருந்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்டுள்ளனர். அதையடுத்து, விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து தகவலறிந்து வந்த க.விலக்கு போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.