சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடருக்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். காதல் திருமணம் நடத்தி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாகவும், மத்திய அரசு நிறைவேற்றும் வரையில் மாநில அரசு ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்தார்.
வெவ்வேறு சாதியில் இருப்பவர்கள் திருமணம் செய்வதன் மூலம் தாக்கப்பட்டால் ஒருவர் தான் அதில் பட்டியலினத்தவர்களாக இருப்பார்கள் என்பதால், வேறு ஒருவருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் உரிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.