சென்னை: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்து முடிந்து, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
அதில், அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை தகவல்களை உரிய செயலிகளில் பதிவேற்றம் செய்வது, வாக்கு எண்ணிக்கை பணிகளை வெப் காஸ்டிங் மூலம் ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.