பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களில் கடந்த 43 நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளால் உண்டியல்கள் நிரம்பின. இதனால், கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில், முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையின் முடிவில் ரூபாய் 2 கோடியே 99 லட்சத்து 2 ஆயிரத்து 134 ரூபாய் கிடைத்தது.
உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதில், தங்கம் 927 கிராமும், வெள்ளி 14 ஆயிரத்து 47 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 756 கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.