செங்கல்பட்டு: திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டதின் கீழ் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி இன்று நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜேசிபி எந்திரம் பள்ளம் எடுக்கும் நிலையில், சாலை ஓரமாக ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட விரிசலால், எரிவாயு கசிந்ததில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.
இதனால் அருகே இருந்த டீக்கடை முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும், கடையில் உள்ள சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகி நாசமானது. பின்னர், 3 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களே போராடி தீயை அணைத்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.