திருப்பத்தூர்: வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் குறித்து குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இவருக்கு, திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஐந்து பேரும், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அவர்களது உறவினரது வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் வீட்டின் கான்கிரீட் கூரை ஊறி இருந்த நிலையில், வீட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மேற்கூரை திடீரென்று சரிந்து விழுந்துள்ளது. இதில், திருமுருகன் மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.