நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியானது முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா முத்தங்கா சரணாலயம், பந்திப்பூர் சரணாலயம் ஆகியவற்றை அடங்கிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள நாடு காணி ஆமைக்குளம் பகுதியில் அரசு தேயிலைத் தோட்டத்தில் நீரோடை அருகே 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பெயரில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் படி, வனச்சரகர் சஞ்சீவி, முதுமலை வனவிலங்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான வனத்துறையினர், உயிரிழந்த பெண் யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் சடலத்தை குழி தோண்டி புதைத்தனர். மேலும், காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.