நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேக்ஸ் பகுதியில், சாலையோரம் இருந்த ராட்சத மரம் காரில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது.
இதில் ஓட்டுநர் ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குன்னூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அறுத்து அகற்றினர்.