சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 23 அணிகளின் மாநில நிர்வாகிகளைச் சந்தித்து, திமுகவின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், 5 பேர் கொண்ட திமுக மூன்று அணிகளை சந்தித்து தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில அளவிலான நிர்வாகிகள் 10-இல் இருந்து 15 பேர் ஒவ்வொரு அணி சார்பாக கலந்து கொண்டனர்.
முன்னதாக மகளிர், மாணவர், விவசாயம், ஆதிதிராவிடர் உள்ளிட்ட 9 அணிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், ஒவ்வொரு துறையிலும் தங்களது பங்களிப்பை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.