தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை குறைந்ததை அடுத்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் கடந்த மூன்று தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாகவும், பிற்பகலில் 53 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மேலும் குறைந்து 42 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் இன்று எட்டாவது நாளாக மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதியில் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும், நீரின் அளவு அதிகமாக உள்ளதால், பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி கபினி அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 11 ஆயிரத்து 852 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.