தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கூடினர். இந்த நிலையில் கோயில் கடற்கரை, வள்ளி குகை, நாழிக்கிணறு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
இத்தகைய சூழலில், நாழிக்கிணறு பகுதியில் பெண் பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக வழிவிட்டு நின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, மயங்கி விழுந்த பெண்ணிற்கு முதலுதவி அளித்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மயங்கி விழுந்த பெண்ணை மீட்க உதவிய பக்தர்களின் செயல் காண்போரின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.