தேனி: கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்படும் நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.எம்.ராஜா என்பவர், தெலுங்கு பேசும் நாயுடு சமுதாய மக்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், இரு சமுதாய மக்களிடையே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுதல், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புதல் என 2 பிரிவுகளின் கீழ் நடிகை கஸ்தூரி மீது ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.