தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தற்பொழுது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் இன்று (ஆக.15) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இத்தகையச் சூழலில், இன்று காலை குற்றாலம் மெயின் அருவி பகுதியில் செயல்பட்டு வந்த சிப்ஸ் கடை ஒன்றில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து கடை முழுவதும் தீக்கிரையானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த விதமான உயிர் சேதங்களும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.
இதனை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதேபோல், கடந்த வருடத்திலும் சிலிண்டர் வெடித்து அடுத்தடுத்து ஏராளமான கடைகள் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.