மதுரை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த என்.சுப்ரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் வருகிற 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கோயிலின் திருப்பணிகள் இன்னும் முற்றிலும் நிறைவேறவில்லை.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் உள்ள பழுதடைந்த சிலைகள், ராஜகோபுரத்திற்கு ஐந்து வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட கோயிலில் நிலுவையில் உள்ள திருப்பணிகளை முடித்தவுடன் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.