சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் மூப்பனார் நகரைச் சேர்ந்தவர் தனபால் (56). இவரின் மனைவி மகேஸ்வரி (52 ). இவர்கள் இருவரும் கடந்த 1995ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டுள்ளதாக மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையறிந்த தம்பதி தலைமறைவாகினர்.
இதனையடுத்து, இருவரையும் பிடிக்க மேட்டூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து பல இடங்களில் தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் தனபால் என்பவர் மீது சேலத்தில் உள்ள நான்கு காவல் நிலையங்களிலும் வரிசையாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தலைமறைவான தம்பதி சென்னையில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை விரைந்த தனிப்படை போலீசார், 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதியைக் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.