தஞ்சாவூர்: நவராத்திரி விழா ஆரம்பமானதையடுத்து, தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு நேற்று மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நடப்பாண்டு நவராத்திரி விழா நேற்று (அக்.3) துவங்கி, வரும் 13ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டது. இதில், ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதேபோல், தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோயில்களான கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு சதஸ் அலங்காரமும், காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு பாலரூபம் அலங்காரமும், எல்லையம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனையும், சியாமளாதேவி அம்மன் கோயிலில் மீனாட்சி அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.