தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தேங்காய்ப்பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவிழா தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அந்த வகையில், 5ஆம் நாளாக இன்று வாராஹி அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.