தூத்துக்குடி: ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பௌர்ணமி தினத்தில் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கோயில் கடற்கரையில் தங்கியிருந்து, விளக்கேற்றி பௌர்ணமி நிலவை வழிபட்டு, பூஜைகள் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே கோயில் கடற்கரையில் குவிந்தனர். அதிகாலை முதல் கடலில் புனித நீராடி, சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில், 750 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கூடுதல் வரிசை முறைகள் அமைக்கப்பட்டுள்ளது.