சென்னை: சின்னதிரையில் குக் வித் கோமாளி உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் புகழ். இவர் பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு தன்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார்.
அதனை நிறைவேற்றும் விதமாக, தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக உணவு வழங்கி வரும் நிலையில் இன்று(செப் 11) 251வது நாளை எட்டியுள்ளது. ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும். அது விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி, உணவு வழங்குவதில் எந்த தடையும் இருக்காது.
அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாகவும், வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.