வள்ளிமலை முருகன் கோயில் படி உற்சவ விழா கோலாகலம்.. பால்குடம் எடுத்து வழிபாடு செய்த பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோயிலில் 108 பால்குடங்கள், மயில் காவடி, கேரளா மேளத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் படி பூஜையில் கலந்து கொண்டனர். பராசக்தியின் அம்சமான வள்ளி பிறந்த காடு என்பதால் இது புனித மலையாகப் போற்றப்படுகிறது. வேலூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்த வள்ளிமலை அமைந்துள்ளது.
இந்த வள்ளிமலையில் முருகன் மலை மீது கோயில் கொண்டுள்ளார். இந்த வள்ளிமலை முருகன் கோயிலை பெரிய அளவில் விழா எடுத்து பிரபலமாக்கி, கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்து இந்த மலையிலேயே நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தவர் தான் வள்ளிமலை சுவாமிகள். வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த கோயிலுக்கு அனைவரும் சென்று வந்தால் சிறப்பு என வாரியார் சுவாமிகள் கூறியுள்ளார்.
இந்த முருகன் கோயிலின் மலை அடிவாரத்தில் இருந்து 444 படிகள் உள்ளன. அனைத்து படிகளுக்கும் கற்பூரம் வைத்து தீபமேற்றி, வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வைத்து வணங்கி செல்வது தான் படி பூஜை. பின்னர் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து முருகனை வணங்குவது மரபு.
அதன்படி, நேற்று (ஜன.28) பெரும்பாலான முருகன் கோயில்களில் படி பூஜை செய்யப்பட்டாலும், இங்கு செய்யப்படும் பூஜையே பிரதானமாகும். வருடத்தின் முதல் மாதம் இந்த படி பூஜை செய்யப்படுகிறது. மலையின் அடிவாரத்திலேயே வள்ளிக்கு தனி சன்னதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.