மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழா.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.. - Sri Mayuranathar Temple Festival - SRI MAYURANATHAR TEMPLE FESTIVAL

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 8:22 AM IST

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் மயிலாடுதுறையில் உள்ளது. இந்த கோயில், "ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து மயிலுரு நீங்கி சிவனுடன் மயூர தாண்டவம் ஆடிய ஆலயம்" என்று போற்றப்படுகிறது.

மேலும், இந்த கோயிலின் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் முத்து பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதி உலா, கற்பக விருட்சம், காமதேனு வாகனம், பூதம் பூதாகி வாகனங்கள், ரிஷப வாகனம், ஓலை சப்பரத்தில் சகோபுர தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு வீதி உலா நடைபெற உள்ளது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம் திருநாளில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாள் திருத்தேரோட்டம், 10ஆம் திருநாள் ஸ்ரீ நடராஜர் திரு வீதி உலா தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில், வைகாசி விசாகப் பெருவிழாவின் சிகர உற்சவமான தெப்பத் திருவிழா நேற்று (மே 26) விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, சுவாமி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகள் கோயில் பிரம்ம தீர்த்தத்தில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகாதீபாராதனை காட்டப்பட்டு, தெப்பம் பிரம்ம தீர்த்தத்தை மூன்று முறை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.