தக்காளி லோடு வேன் கவிழ்ந்து விபத்து; சிதறிய தக்காளிகளைப் போட்டிபோட்டு அள்ளிச் சென்ற மக்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Mar 2, 2024, 8:59 AM IST
திண்டுக்கல்: தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து சுமார் 100 பெட்டிகளில் 3 டன் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை அரூரைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன்(22) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா கல்வார்பட்டி பேருந்து நிலையம் அருகே வந்த பொழுது, திடீரென வேனின் பின்பக்கம் இருந்த வலது பக்க டயர் வெடித்துள்ளது.
அதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை நடுரோட்டில் கவிழ்ந்துள்ளது. அப்போது வேனில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் கொட்டியுள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கவிழ்ந்த வேனை நிமிர்த்தி சாலையோரம் நிறுத்த உதவி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, சாலையில் கொட்டிக் கிடந்த தக்காளிகளை, கல்வார்பட்டி கிராம மக்கள் சாக்குப் பைகள் மற்றும் கட்டைப் பைகளில் வீட்டுக்கு அள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியது. தக்காளியை அள்ள அப்பகுதியில் மக்கள் கூடியதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்து குறித்து தகவலறிந்த கூம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.