விண்ணை முட்டிய அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்! - Tiruchendur Avani Therottam - TIRUCHENDUR AVANI THEROTTAM
🎬 Watch Now: Feature Video
Published : Sep 2, 2024, 1:42 PM IST
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமி அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, ஐந்தாம் திருவிழா அன்று இரவு குடவரைவாயில் தீபாராதனையும், 7ஆம் திருவிழா அன்று காலை சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ஆம் திருவிழா நண்பகல் பச்சை சாத்திக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழா இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் காலை 6.00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது. பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது.
தொடர்ந்து வள்ளியம்மன் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.